Tuesday, December 27, 2022

51.தெரிந்து தெளிதல்

(தகுதியுடையவரை ஆராய்ந்து தெளிந்து நம்பிக்கை வைத்தல்)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 51

501
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்.

அறம் காப்பதில் உறுதி, பொருள் ஆளுகையில் நாணயம், நெறிதவறா இன்பம் நாடல், தன் உயிர்க்கு அஞ்சாத தன்மை ஆகிய நான்கையும் ஆராய்ந்தறிந்த பிறகே, ஒருவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும். 

502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் கட்டே தெளிவு.

நற்குடியில் பிறந்து, குற்றம் இல்லாதவராய், பழிக்கு அஞ்சி நாணும் இயல்புடையவரைத் தெளிந்தறிந்து, அவரையே பதவிக்குத் தெரிவு செய்திடல் வேண்டும். 

503
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அரிய நூல்கள் பலவும் கற்றுத் தேர்ந்து, குற்றமற்றவராய் இருப்பினும், அவரிடத்தும் அறியாமை இல்லாதிருத்தல் என்பது அரிதாகும். 

504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவரது நற்குணங்களையும், குறைகளையும்  நன்கு ஆராய்ந்து அறிந்து, அவற்றுள், மிகையானவை யாதெனத் அறிந்த பின்னரே, அவரைப் பற்றித் தெளிந்திடல் வேண்டும். 

505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 
கருமமே கட்டளைக் கல்.

ஒருவரது பெருமைக்குரிய உயர் குணத்தையும், சிறுமைக்குரிய இழிக் குணத்தையும், தெளிந்து காட்டவல்ல உரைகல்லாகத் திகழ்வது, அவரது செயல்களே ஆகும்.

506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றிலர் நாணார் பழி.

நட்பு சுற்றம் அற்றவர்களை நம்பி, அவர்களை பதவிக்கு தெரிவு செய்திடல் கூடாது; உலகில் பாசம், பற்றுதல் இல்லாத அவர்கள் பழிக்கு நாண மாட்டார்கள்.

507
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

அறிந்திட வேண்டியனவற்றை அறிந்திடாத அறிவிலிகளை, அன்பின் பொருட்டு, அவர்களை ஒருபோதும் நம்பித் தெளிதல் என்பது, அறியாமை மட்டுமன்று, அதனால், ஒரு பயனுமில்லை. 

508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.

ஒருவரைப் பற்றி நன்கு ஆராய்ந்து பார்க்காமல், அவர்பால் நம்பிக்கை வைத்து, பதவியில் அமர்த்தினால், அதனால் தனக்கு மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினர்க்கும் தீராத துன்பத்தை தரும்.  

509
தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

யாரையும் ஆராய்ந்து தெளியாமல், பதவியில் அமர்த்திடல் கூடாது; நன்கு ஆராய்ந்து தெளிந்தபின், அவரிடம் காணும் பொருள்கள் குறித்து நம்புதல் வேண்டும். 

510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஒருவரை ஆராய்ந்து தெளியாமல் பதவியில் அமர்த்துதல், ஆராய்ந்து தெளிந்த பின்னர், அவர் குறித்து சந்தேகம் கொள்ளுதல், ஆகிய இரண்டுமே தீராத துன்பத்தைத் தரும். 

No comments:

Post a Comment