(பேச்சுத் திறன் எனும் பெருஞ்செல்வம்)
641
நாநலம் என்னும் நலனுடைமை; அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
நலம் மிக்க நாவன்மையைக் கொண்டிருத்தல் என்பது, தனிச்சிறப்பு மிகுந்த செல்வத்தைப் பெற்றிருத்தல் போன்றது; அத்தகு சிறப்புமிக்கதான நலன், நாவன்மை தவிர்த்து, வேறொன்றில் இல்லை.
642
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.
ஒருவர் சொல்லும் சொல்லில் இருந்து, ஆக்கமும் அழிவும் ஏற்படக்கூடும்; ஆதலால், பேசும் போது, எந்தவொரு சொல்லிலிருந்தும், தவறேதும் நேர்ந்திடாதவாறு காத்துக் கொளல் வேண்டும்.
643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
சொல்வன்மை என்பதாவது, சொல்லும் போது கேட்டவரைத் தன்வயப்படுத்தும் தன்மையில் சொல்லுவதும், கேட்காதவர்களையும், தேடி வந்து கேட்கும்படி ஆவலைத் தூண்டும் தன்மையதாகச் சொல்வதுமே ஆகும்.
644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊஉங்கு இல்.
எவரிடத்தும் எதையும் சொல்லும் முன், அச் சொல்லின் திறம் அறிந்து சொல்லுதல் வேண்டும்; அத்தகையச் சொல்லை விடவும், அறனும், உண்மையைத் தாங்கிய சிறப்பு மிக்கதும், வேறொன்று இல்லை.
645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
தாம் சொல்லுகின்ற சொல்லை, வெல்லும் தன்மையுடைய வேறோர் சொல் இல்லை என்பதை அறிந்த பின்னரே, தாம் சொல்லக் கருதிய சொல்லைச் சொல்லுதல் வேண்டும்.
646
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசுஅற்றார் கோள்.
பிறர் விரும்பும் விதமாக, பயன் மிகுந்த தன்மையதாய் சொல்லுதலும், பிறர் தம்மிடம் பேசும் சொல்லில் இருந்து, அதன் பயனை ஆராய்ந்தறிந்து ஏற்றுக் கொள்வதும், மாசற்ற அறிவுடையாரின் சிறந்த கொள்கையாகும்.
647
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
சொல்ல வகுத்ததை திறமுடன் சொல்லும் ஆற்றல் மிகுத்தும், சோர்விலாத் தன்மையுடனும், அஞ்சாத உள்ளமும் கொண்டுள்ள ஒருவரை, எவராலும் எதிர்கொண்டு வெல்லுதல் அரிதாகும்.
648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
தம் கருத்துக்களை வகைப்படுத்தியும், இனியவாகவும் எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவர்கள் சொல்வதை, உலகம் விரைந்து ஏற்றுக் கொண்டு, அதன்படியே இயங்கும்.
649
பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசுஅற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
குற்றம் குறைகள் ஏதும் இன்றி, சில சொற்கள் கொண்டே சுருங்கச் சொல்லும் ஆற்றல் இல்லாதவர்கள் தான், பற்பல சொற்களைக் கொண்டு திரும்பத் திரும்ப பேசுவதை மிகவும் விரும்புவர்.
650
இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துஉரையா தார்.
தாம் கற்றறிந்ததன் கருப்பொருளை பிறர் உணர்ந்திடத் தக்கவாறு, விளக்கிச் சொல்லும் ஆற்றலைக் கைவரப் பெறாதவர்கள், கொத்தாக மலர்ந்தும் மணமில்லா மலரைப் போன்றவர் ஆவார்.
No comments:
Post a Comment