Wednesday, January 25, 2023

22.ஒப்புரவறிதல்

(உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல்)

அதிகாரம்#22 | அறம் | இல்லறவியல் | குறள்கள் 211-220

211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.

மேன்மக்கள் பிறரிடம் கைம்மாறை எதிர்பார்த்து உதவி செய்வதில்லை; அவ்வாறு செய்வதானால், எதையும் எதிர்பாராது பெய்யும் மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யும்?

212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

ஒப்புரவாளர்கள் தம் பெரும் உழைப்பால், முயன்று சேர்த்த பொருளெல்லாம், தேவைப்படுவோர்க்கு உதவுவதற்காகப் பயன்படுத்துவதற்கே ஆகும்.

213
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

இயலாதோர்க்கு உதவும் பண்பை விடவும், சிறந்த ஒன்றை இந்த உலகிலும், இனி வரப்போகும் புது உலகெங்கினும் காணப் பெறுவது அரிதே.

214
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

பிறர்க்கு உதவி செய்யும் பண்புடைய வாழ்வு நெறியுடையோரே, உயிர் வாழ்பவர் ஆவார்; அதற்கு மாறானவர்கள், இறந்தவருக்கு ஒப்பானவர் ஆவார். 

215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பொதுநலம் போற்றி எல்லார்க்கும் உதவியாய் வாழ்ந்திட எண்ணும் அறிவு மிக்கவரின் செல்வம், ஊருக்கேப் பயனாகும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். 

216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

ஒப்புரவாகிய பிறர்க்கு உதவிடும் அறப்பண்புடையோரிடம் செல்வம் சேரும்போது, அது ஊரில் பழுத்துக் குலுங்கும் மரம் போல எல்லார்க்கும் பயன்படுவதாகும்.

217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பிறர்க்கு உதவும் பண்பாளருடைய செல்வமானது, மரத்தின் எல்லாப் பகுதிகளும் நோய்தீர் மருந்தெனப் பயன்படுவது போன்றதாகும்.

218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கா
ர்
கடனறி காட்சி யவர்.

தன் கடமையுணர்ந்த அறிவுடையவர் தமது பொருள்வளம் குன்றி வறுமையில் வாடும் போதும், பிறர்க்குதவும் ஒப்புரவுப் பண்பைக் காப்பதிலிருந்து தளர மாட்டார்.

219
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

பிறர்க்கு உதவும் பண்புடையவர்கள் வறுமையில் வீழ்தல் என்பது, பிறர்க்கு உதவிட இயலாமல் வருந்தும் நிலையினை அடையும் தன்மையால் தான். 

220
ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.

பிறர்க்குதவும் உயர்பண்பினால் ஒருவர்க்குக் கேடு விளையுமாயின், அக்கேடானது அவர் தன்னையே விலையாகக் கொடுத்து வாங்கிக் கொள்வதான மதிப்புடையது ஆகும்.

அடுத்த அதிகாரம் ➤ 23.ஈகை

No comments:

Post a Comment