(ஆன்றோர் கூறுவதைக் கேட்கும் ஞானம்)
அதிகாரம்: 42 | பொருட்பால் | அரசியல்| குறள்கள் 411-420
411
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
செல்வங்களுள் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம், செவி வழிக் கேட்டறியும் கேள்விச் செல்வம் ஆகும்; அச்செல்வமே செல்வங்களிலெல்லாம் முதன்மையானதாகும்.
412
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
செவி வழியே பெறப்படும், கேட்டல் எனும் இனிய உணவு கிடைக்காத போது, நம் வயிற்றுக்கும் சிறிது உணவு வழங்கப்படும்.
413
செவிஉணவில் கேள்வி உடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
செவிக்குரிய உணவாகக் கேள்வியைப் பெறுபவர், இப் பூமியில் வாழ்பவராயினும், வேள்வித் தீயிலிட்ட அவி உணவைக் கொள்வோராகிய வானுலகத்து ஆன்றோர்க்கு நிகரெனக் கருதப்படுவார்.
414
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
கல்லாதவர் ஆயினும், கற்றவர் கூறுவனவற்றை செவிகூர்ந்து கேட்டல் வேண்டும்; அவ்வாறு கேட்டல் என்பது, நடை தளர்ந்த ஒருவர்க்கு, ஊன்றுகோல் போன்று துணையாக அமையும்.
415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
அறிவுமிக்க ஒழுக்கமுடையோரின் அறிவுரைகள், வழுக்கும் நிலத்தில், நடப்பவருக்கு உதவும் ஊன்றுகோலைப் போல, துன்பகாலத்தின் போது, துணை செய்யும்.
416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
எத்தனை சிறியதே ஆயினும், நல்லனவற்றை கேட்க வேண்டும். அவ்வாறு, கேட்ட அளவிற்கு நிறைந்த பெருமையைத் தரும்.
417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.
அறிவுநுட்பம் பொதிந்த கேள்வியறிவு உடையவர்கள், தாம் கேட்டவற்றுள், தவறென்று உணர்ந்த பொருளைக் குறித்து, ஒருபோதும் அறிவின்றி பேச மாட்டார்கள்.
418
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
கேட்கும் திறனிருப்பினும், அறிவுமிக்க நல்லோர் உரையைக் கேட்க மறுக்கும் செவியானது, கேட்பதற்கு இயலா செவிட்டுத் தன்மையதே ஆகும்.
419
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
நுட்பம் பொருந்திய வகையிலான, கேள்விஞானம் இல்லாதவர்கள், பணிவு மிக்க வகையில் பேசும் திறம் பெற்றவராதல் அரிது.
420
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
செவியின் வழியே கேட்டல் எனும் சுவையினை உணராது, வாய் வழிச் சுவையை நுகரும் உணர்வுடையவர்கள், இவ்வுலகினின்று மறைந்தால் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?
► அடுத்த அதிகாரம்: 43.அறிவுடைமை
No comments:
Post a Comment