Wednesday, February 15, 2023

1.கடவுள் வாழ்த்து


(கடவுளை வணங்குதல்)

அறத்துப்பால் | பாயிரம் | அதிகாரம்.1 | குறள்கள்#1-10
1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்கள் யாவும் அகர எழுத்தை முதலாகக் கொண்டவை; உலகின் உயிர்கள் யாவும் இறைவனை முதன்மையாகக் கொண்டவையாகும்.
2
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


தூய அறிவின் உருவெனத் திகழும் இறைவனின் திருவடிகளை வணங்காதவர்க்கு, அவர் கற்ற கல்வியினால் என்ன பயன்?

3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


மலர் போன்ற மனத்துள் நிறைந்திருக்கும் இறைவனின் பெருமைமிகும் திருவடிகளை நினைந்து வாழ்பவர், உலகில் நெடுங்காலம் சிறந்து வாழ்வர்.
4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.


விருப்பு வெறுப்பற்ற இறைவனின் திருவடிகளை நாடுவோர்க்கு, ஒரு போதும் துன்பம் வருவதில்லை.

5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இறைவனது மெய்ப்புகழை விரும்பும் ஒருவரிடம் அவர்தம் அறியாமையின் காரணமாக வரும் நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேருவதில்லை.
6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலங்களின் ஆசைகளை ஒழித்த இறைவனின் பொய்யற்ற ஒழுக்க நெறியைப் பின்பற்றுவோர், நிலைத்த நல்வாழ்வைப் பெறுவர்.
7
தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


தனக்கு ஈடு இணையில்லாத இறைவனின் திருவடிகளைப் போற்றிப் பணிவோர்க்கு அன்றி மற்றவர்களின் மனக்கவலையைப் போக்குதல் அரிதாகும்.


8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


கடல் போல் அறம் பொருந்திய இறைவனின் திருவடிகளைப் பணிந்தவர் அன்றி மற்றவர்கள், துன்பம் எனும் கடலை நீந்திக் கடத்தல் அரிதாகும்.
9
கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.


எட்டு வகைக் குணங்கள் கொண்ட இறைவனின் திருவடிகளை வணங்காதவருடைய தலை என்பது, கேட்பதற்கு இயலா செவிகள், பார்ப்பதற்கு இயலா கண்களைப் போன்று பயனற்றதாகும்.


10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.


இறைவனுடைய திருவடிகளை வணங்கிச் சேருபவர், பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடந்து விடுவர்; மற்றவர் அங்ஙனம் கடக்க மாட்டார்.


முகப்புரை ⏪2.வான் சிறப்பு


வலையொளி (YouTube)-ல் திருக்குறள் ...

No comments:

Post a Comment