Sunday, February 5, 2023

10.இனியவை கூறல்

(இனிய சொற்களைக் கூறுதல்)

91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அன்பு கலந்ததும், வஞ்சனை அற்றதும், வாய்மை நிறைந்ததுமான வாய்ச் சொற்களே இன்சொல் ஆகும்.

92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

அகமகிழ்ந்து பிறர்க்கு‌ பொருளை அளிப்பதை விடவும், முகம் மலர்ந்து இனிமையாக பேசுதல், சிறந்த பண்பாகும்.

93
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

முகம் மலர்ந்து இனிதாய் நோக்கி, அகம் மலர்ந்து இனிய சொற்களைக் கூறுதலே, அறம் சார்ந்த இனியப் பண்பாகும்.

94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.

அனைவருக்கும்  இன்பம் தரவல்ல, இனிய சொல் பேசி கனிவாய் நட்பு கொள்பவருக்கு வறுமை வருவதில்லை.

95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

ஒருவருக்கு பணிவு, இனிமையாய் பேசும் நற்குணம் ஆகியவையே சிறந்த அணிகலன் ஆகும்; வேறு எதுவுமே அணி அல்ல.

96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பிறர் நன்மைகள் கருதி ஆராய்ந்து, இனிய  சொற்களைப் பேசுவோர் வாழ்வில் தீமைகள் விலகி நல்லறம் சிறக்கும்.

97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பிறர்க்கு நன்மை தரக்கூடியதும், இனிய பண்பினின்று விலகாததுமான இன்சொற்களைக் கூறுவோர்க்கு, நீதி விலகாத வாழ்க்கையையும், இன்பம் மிகுந்த நன்மைகளையும் தரும்.

98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

பிறர்க்கு துன்பம் தரவல்ல, சிறுமையில்லாதவாறு கூறும் இன்சொல் ஒருவர்க்கு எப்பிறப்பிலும் இன்பம் தரும்.

99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

தமக்கு இன்பத்தைத் தரக்கூடியது பிறரது இனிய சொற்களேயென உணர்ந்தவர், மாறாக, பிறர்க்குத் துன்பம் தரவல்ல கடுஞ்சொற்களை ஏன் சொல்ல வேண்டும்?

100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இன்சொற்களைக் கூறாமல், கடுஞ்சொற்களை கூறுதல் என்பது, தன்னிடம் உள்ள சுவை மிகும் கனிகளை ஒதுக்கிவிட்டு, காய்களை உண்பதைப் போன்றதாகும்.

No comments:

Post a Comment