Sunday, October 30, 2022

108.கயமை

(தீய இயல்பு)

அதிகாரம்: 108. கயமை |பொருட்பால் | குடியியல்

1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.

கயவர் எனும் தீயோர், தோற்றத்தில் மக்களைப் போன்றே இருப்பர்; பறவை விலங்கொத்த இனங்களில் கூட அவருக்கு ஒப்பானவரை யான் பார்த்ததில்லை.

1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

நல்ல எண்ணங்களை கொண்டோரைக் காட்டிலும், நன்மை தீமை என எதைப் பற்றியும் கவலையற்றவர்கள் கயவர்கள்.

1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

தான் விரும்பியவண்ணம் வாழும் இயல்பினால், கயவர்களும் தேவர்களை ஒத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

வாழ்வில் அறமற்ற கயவர்கள், தம்மை விடவும் இழிவுடையவர்களைக் காணின் அவர்களைக் காட்டிலும் தாமே சிறந்தவர் என்ற இறுமாப்புக் கொள்ளும் இயல்பினர் ஆவார்.

1075
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

அச்சமே கீழ்மக்களின் ஒழுக்கத்திற்கு காரணம் ஆகும்; அத்துடன் தாம் விரும்பும் பொருள் கிடைக்குமாயின் அதன் காரணமாகவும் சிறிது ஒழுக்கத்தினராய் நடப்பர்.

1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

கயவர்கள் தாம் கேட்டறிந்த மறைபொருளை பிறறிய வலிந்து போய் சொல்லுதலால், அறையப்படும் பறை எனும் கருவிக்கு ஒப்பானவர் ஆவர்.

1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.

கயவர்கள் தம் கன்னத்தை உடைத்திட முனைவோர்க்கு அன்றி, வேறெவர்க்கும் தம் எச்சில் கையையும் உதற மாட்டாதவர்.

1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

எளியோர் தம் இயலாமையை சொன்ன மாத்திரமே இரக்கம் கொண்டு சான்றோர்கள் அவர்களுக்கு உதவிடுவர்; ஆனால், எளியோரை கரும்பினைப் பிழிதல் போன்று நசுக்கிய பின்னரே உதவிடும் இயல்புடையோர் கயவர்கள் ஆவர்.

1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

பிறர் நன்முறையில் உடுத்துதலையும் நன்கு உண்ணுதலையும் காணும் போது அவர் மீது குற்றம் சுமத்தும் இயல்பினர் கயவர்களே ஆவர்.

1080
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

கயவர்கள், தமக்கு துன்பம் வருங்கால், தம்மையே பிறரிடம் விற்று தப்பிக்கும் இழிதகுதியுடையோர் ஆவர்.

No comments:

Post a Comment