அதிகாரம்: 103. குடி செயல்வகைபால் வகை: 2. பொருள்
இயல்: 11. குடியியல்
1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
நாடுயர குடி உயர தம் கடமையே கண்ணென சோர்வின்றி முயல்வோர் தம் பெருமையைக் காட்டிலும் வேறொரு பெருமை இல்லை.
1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
நிறை அறிவும் விடா முயற்சியும் கைக் கொண்டு இடைவிடா செயல்படும் ஒருவனால் நாடும் குடியும் உயரும்.
1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
தம் குடி மக்களை மேன்மை கொள்ள முனையும் ஒருவனுக்கு தெய்வமே ஆடையுடுத்தி துணையென அவன் முன் வந்து உதவி புரிந்திடும்.
1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
தம் குடி உயர்ந்திடத் தேவையான செயல்களை விரைந்து முயல்வோர்க்குத் தாமாகவே திறம் கூடி வெற்றிகள் வாய்க்கப்பெறும்.
1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
குற்றங்கள் இல்லாது தம் குடி உயர வாழ்பவரை இவ்வுலகம் தம் சுற்றம் எனக் கைக்கொள்வர்.
1026
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது, தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பினைத் தனக்கென ஆக்கிக் கொள்ளுவதே ஆகும்.
1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
போர்க்களத்தே படைநடத்திடும் பொறுப்பு அஞ்சாத வீரருக்கே வாய்ப்பது போல், ஒரு குடியிலும் பிறந்தவருள் மற்றைய எல்லோரையும் காத்து உயரச் செய்யும் வல்லமையுடையோர்க்கே பொறுப்பு உள்ளது.
1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
தம் குடி உயர்வதற்கான செயல்களுக்கென்று இசைவான காலம் என்று ஒன்றில்லை; அத்தகு காலம் வாய்க்கட்டும் என சோம்பிக் கிடந்து தயங்கிடின் தம் குடிமக்களின் நலமே சீர்கெடும்.
1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
தன்னைச் சார்ந்த குடியினர்க்கு வரப்பெறும் இடர்களினின்று காத்து நிற்போரின் உடல் துன்பத்தைத் தாங்குவதற்கென்றே வாய்த்ததோ?
1030
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
இடர்வருங்கால் உடனின்று காக்கும் ஆற்றல் இல்லாதவர் தம் குடி, துன்பம் எனும் கோடாரி அடியில் வெட்ட வீழ்ந்த மரம் போலாகி விடும்.
No comments:
Post a Comment