(வாழ்வதற்கென ஒன்றுமில்லா வறியநிலை)
1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
வறுமையைப் போல் துன்பமானது யாதெனில், அந்த வறுமை ஒன்றே தான்.
1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
ஒருவனை பாவி என இகழத்தக்க வகையில் வறுமை துயர் ஏற்பட்டால், அவனுக்கு இப்பிறவியிலும் வரும் பிறவியிலும் துன்பமே வரும்.
1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
வறுமையினால் பேராசை கொள்ளும் ஒருவனுடைய குடும்பப் பரம்பரையின் பெருமையும் புகழும் ஒருங்கே கெட்டழியும்.
1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
நற்குடியில் பிறந்தவர்க்கும் வறுமை என்பது வந்து விட்டால், இழிசொல் சொல்லும்படியான சோர்வினை தந்துவிடும்.
1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
இல்லாமை எனும் வறிய நிலையிலான துன்பத்திற்குள்ளே இருந்து எல்லா வகையிலான துன்பங்களும் வந்து சேரும்.
1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
நன்நூல்களை கற்று உணர்ந்து அறிவார்ந்த கருத்துக்கள், சொல்பவர் வறியவர் ஆயின் அவை கேட்பாரின்றி பயனற்று போகும்.
1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
ஒருவன் வறுமை காரணமாக அறம் தவறி வாழ்வானாயின், அவனைப் பெற்ற தாய் கூட அந்நியராய் கருதி புறக்கணிப்பாள்.
1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
நேற்று வந்து கொன்றது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் வந்து விடுமோ என வறியவன் அஞ்சியஞ்சி தினந்தோறும் தவிப்பான்.
1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
ஒருவன் நெருப்பினுள் தூங்குதல் எளிதாய் கூடும்; ஆனால், கொடும் வறுமையில் தூங்குதல் என்பது இயலாததாகும்.
1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
வாழ்வதற்கு வழியற்று பொருளில்லா நிலையிலும் ஒருவர் முற்றும் துறவாதிருத்தல், பிறர் வீட்டிலுள்ள உப்புக்கும் கஞ்சிக்குமே கேடாகும்.
No comments:
Post a Comment